செப்டம்பர்,12-
இசைப்புயல் ஏஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைநிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த மாதம் 12-ம் தேதிநடப்பதாக இருந்தது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட அந்த நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
’ ரசிகர்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும்’என்று ரகுமான் அறிவித்திருந்ததால் , டிக்கெட் வாங்கிய பல அயிரம் பேர்இசை நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம். பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் அரங்கத்துக்குள் செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். . கோல்டு, பிளாட்டினம், சில்வர் என 2 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய நூற்றுக்கணக்கானோர் ஏ.ஆர்.ரகுமான் இசையை கேட்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கு
மயக்கமும்,, மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இசையை பருக உள்ளே சென்றவர்கள் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் சிரமப்பட்டனர்.
என்ன நடந்தது?
ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கான 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டது.ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணையம் வாயிலாக மேலும் பல ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்ற முதல்நாள் வரை டிக்கெட்டுகளை விற்று காசு பார்த்துள்ளனர். இதுவே அனைத்து குளறுபடிகளுக்கும் காரணமாக அமைந்து விட்டது.
எல்லாம் நடந்து முடிந்து விட்ட பிறகு ஏ.ஆர்.ரகுமான் கூலாக தன்னால்.ரசிகர்கள், மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன் .என்னை சிலர் சிறந்தவர் என அழைக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்வதற்கு இந்தமுறை நான் பலியாடு ஆகிறேன்’ என ரகுமான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த களேபரம் ஏன் நடந்தது என்பதை விரிவாக விளக்கி ரகுமான் பேட்டியும் அளித்துள்ளார்.அதன் விவரம்: ‘’எனது இசை நிகழ்ச்சிக்கான, அனைத்து ஏற்பாடுகளும் சரியாக நடக்கும் என்றுதான் நம்பியிருந்தேன். மழை வரவில்லை, அந்த சந்தோஷத்துடன் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தேன். ஆனால் அசம்பாவிதங்கள் நேர்ந்து விட்டன.நடந்த சம்பவத்துக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இந்தக் குளறுபடிகளுக்காக நான் வேறு யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை.
இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி அமைப்பினர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 46 ஆயிரம்சீட்டுகளை போட்டிருந்தனர். பலரும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு, மற்ற இடங்களில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்குச் செல்லவில்லை. இதனைப் பார்த்த காவலர்கள், அரங்கம் நிரம்பிவிட்டதாக தவறாக நினைத்து வாயில் கதவுகளை அடைத்துவிட்டனர். இந்த நேரத்தில், இசை நிகழ்ச்சியும் தொடங்கிவிட்டது.
இது எனக்கு ஒரு பாடம். ஒரு இசை கலைஞனாக மட்டுமின்றி, நிகழ்ச்சி நடைபெறும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்’’
இது ரகுமானின் விளக்கம்.
எனிமும் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் திட்டித்தீர்த்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனமும்
ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தது.
இந்த விவகாரம் சென்னையில் சட்டம்-ஒழுங்கு நிலையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதால் ஏசிடிசி நிறுவனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஏ.ஆர்.ரகுமானிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ரகுமானுக்கு சில கேள்விகள்..
இது போன்ற நிகழச்சிகளின் போது ஏற்படும் நெரிசலில் சிக்கி பல நூறு பேர் இறந்து விடும் செய்திகள் அவ்வப்போது வெளியாவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அன்று பனையூரிலும் அப்படி ஒரு நெரிசல் நடப்பதற்கான அபாயங்கள் இருந்ததை நீங்கள் மறந்து விட வேண்டாம். அப்படி நடந்திருந்தால் அதற்கும் தங்களின் மன்னிப்பு போன உயிர்களை மீட்டுக் கொடுத்து இருக்குமா?
இப்போது கூட உங்கள் அறிக்கை எல்லா குளறுபடிகளுக்கும் காரணமான ஏசிடிசி நிறுவனத்தை பாதுகாப்பதாக இருப்பது ஏன் ?
உங்கள் மீது அனைவருக்கும் மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனாலும் மறக்க முடியுமா நெஞ்சம் நிகழ்ச்சி அதைக் கொஞ்சம் சரித்துவிட்டதை வலைதளங்களை பார்த்தால் தெரியும்.
000