June 09, 23
மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து தமிழ்நாடு அரசு மாறப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வுகளை முடித்துக்கொண்டு சென்னை புறப்படுவதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின் அங்குள்ள கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவவசாயிகளின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருவதாக கூறினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டவுடன் அதை உடனடியாக எதிர்த்து அது வரவிடாமல் செய்து வேளாண் மண்டலத்தை காத்துள்ளதாக கூறினார். காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணி 96 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள பணிகள் சில நாட்களில் முடிக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தர். மேட்டூர் அணையை வரும் 12-ம் தேதி தான் திறந்து வைக்க உள்ளதாகவும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் விவசாயிகள் புதிய சாதனை படைக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாததற்கு ஆளுநர் தான் காரணம் என உயர்கல்வி துறை அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அதே குற்றச்சாட்டை தானும் வைப்பதாக மு.க.ஸ்டாலின் கூறினார். இது போன்ற பிரச்சனைகளுக்காக தான் பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறினார்.