தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் என்று ல் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்ற போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுக் குறித்து விவாதிக்கப்பட்டது. பாராதீய ஜனதாவுடன் மற்ற சிறிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது, நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் அறிக்கை தயாரிப்பது போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கும் என்பது போன்ற கருத்துகள் வெளியானது.
இதனால் எச்சரிக்கை அடைந்த எடப்பாடி பழனிசாமி டெல்லியில் காலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
“தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கும். அதிமுகவின் கொள்கையில் இருந்து நாங்கள் பிறழ மாட்டோம்; பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக இருக்கிறது.
உலக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோதும், இந்தியாவில் பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டார். மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய, பெரிய கட்சிகள் என்று இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் கூட்டணி அமையும் என்று கூறிய போது அதற்கு அதிமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. அதே கருத்தை இப்போது எடப்பாடி உறுதி செய்து விமர்சனங்களை தவிர்த்து இருக்கிறார்.
000