மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத்பவார் புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். தலைநகர் டெல்லியில் கார்கேவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் ஒரே அணியாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதலமைச்சருமான நிதீஷ்குமார் , ஆர். ஜே. கட்சித் தலைவரும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் இருவரும் டெல்லியில் புதன்கிழமை அன்று கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்கள். பின்னர் அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் நிறவனரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்கள். நிதீஷ்குமாரின் சந்திப்புகளைத் தொடர்ந்து சரத்பவாரின் டெல்லி நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது.