திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் லுங்கியில் புதுப்படம் பார்க்க வந்த இளைஞர் தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் எம்.கே.ஜி திரையரங்கில் ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் புத்தாண்டு அன்று வெளியான ருத்ரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை காண திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் கிராமத்திற்கு 11 இளைஞர்கள் வந்துள்ளனர்.
இந்த 11 இளைஞர்களில் ஒருவர் லுங்கி கட்டிக் கொண்டு திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். இதனால் திரையரங்கு ஊழியர்கள் அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திரையரங்கு ஊழியர்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திரையரங்கு மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு திரையரங்கம் மேலாளரும் திரையரங்குக்குள் லுங்கி கட்டிக் கொண்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை திரையரங்குக்கு வைத்துள்ளதாகவும் இதனால் தங்கள் திரையரங்குகளில் லுங்கி கட்டிக் கொண்டு வரும் நபர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை எழுத்துப்பூர்வமாக எழுதி கேட்ட இளைஞர்களுக்கு திரையரங்கு மேலாளர் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திரையரங்கு மேலாளர் மங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படை விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை திரையரங்குகளில் இருந்து வெளியேற்றினார். இதனால் இளைஞர்கள் 11 பேரும் திரைப்படம் பார்க்காமல் திரும்பிச் சென்றனர்.