ஏப்ரல்.19
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்த காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை பொன்விழாவாக கொண்டாடும் வகையில், தென் மண்டல காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கும், காவல் துறையில் உயர் அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், இன்சாஸ் ரக துப்பாக்கி, பிஸ்டல் ரக துப்பாக்கி என இரண்டு பிரிவுகளாக பெண்கள் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
பெண்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், உயர் அதிகாரிகளுக்கான போட்டி நேற்று நடந்தது. அதில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் உள்பட 13 பேர் பங்கேற்றனர். இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார் வென்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.