மே.25
லியோ படத்திற்குப்பின்னர் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தனது 68வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நடிகர் விஜய்க்கு 68வது படமாகும். இந்த படத்தில் நடிப்பதற்காக கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த படம் விஜய்க்கு ஏற்றாற்போல், மாஸ் மசாலா விஷயங்களுடன் எனது ஸ்டைலில் இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இந்தப் புதிய படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கவுரவ தோற்றத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, அண்மைக்காலமாக தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். அவரது வில்லன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுவருகிறது. சிம்புவின் மாநாடு படத்திலும் வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டியிருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, தற்போது வில்லன் வேடத்திற்கான வாய்ப்புகள் குவிந்துவருவது குறிப்பிடத்தக்கது.