வெளிநாடு சென்றால் மட்டும் முதலீடுகள் வராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் பற்றி ஆளுநர் விமர்சனம் செய்துள்ளார். உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், முதலீட்டாளர்களை கவரக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றார். வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் அவர்கள் கடுமையாக பேரம் பேசுபவர்கள் என்றும் கூறினார். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.
தற்போது தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும், அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி வலியுறுத்தி இருக்கிறார். பாலிடெக்னிக், ஐடிஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைகிறது. இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியாயில் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருவதாகவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டு, தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த 9 நாள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இதன்மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்து ஆளுசர் ரவி விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.