மே.8
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மே 10ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டில் மே மாதம் 10 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி, அங்கன்வாடிப் பணிகளின் கீழ் இணை உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாலும், உலர் உணவுப் பொருட்கள் வழங்க வழிவகை இல்லை என்பதாலும் மேற்கண்ட கோடை விடுமுறை காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் மையக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவை கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர், வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மே மாதம் 50 சதவீதம் குழந்தைகள் மட்டுமே மையங்களுக்கு வருகை புரிவதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில், அந்த அளவுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் தேவை ஏற்படின் அதுகுறித்து தனியே பரிசீலிக்குமாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.