அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமும் ஒரே கதைக்களத்தை மையமாக கொண்டவை என்ற தகவல் கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.தமிழ் புத்தாண்டை யொட்டி, அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தின் கதைக்களம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.
கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாத தாதா வேடத்தில் அஜித் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் வன்முறையை கை விட்டு, தனது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முயற்சி செய்கிறார்.
ஆனால், அவரது கடந்த காலம் அவரை பின் தொடர்கிறது. ஒரு காலத்தில் அஜித் அரங்கேற்றிய , இரக்கமற்ற செயல்களும், குற்றங்களும், அவரை ‘விடாது கருப்பு’ என்பது போல் துரத்துகிறது.
அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார், நினைத்த வாழ்க்கையை அவரால் வாழ முடிகிறதா ? என்பதே கதை.
கார்த்திக் சுப்பராஜா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘ரெட்ரோ’ படத்தின் கதை களமும் கிட்டத்தட்ட இதுதான்.
ஒரு கேங்ஸ்டர்’ வன்முறையை கைவிட்டு,காதலியை கல்யாணம் செய்து கொண்டு, அமைதியாக வாழ விரும்புகிறான்.,ஆனால் அவனது பழைய எதிரிகள் அவனை துரத்துகிறார்கள்.
வேறுவழி இன்றி, தனது பழைய தொழிலுக்கே – அந்த ‘கேங்ஸ்டர்’ திரும்புகிறான்.திருந்தி வாழ நினைத்தவனை, கடந்த காலம்,,தன் பிடிக்குள் சிக்க வைத்துக்கொள்கிறது.
இரு படங்களின் கரு ஒன்று என்றாலும், அதை இரு இயக்குநர்களும் சொல்லிய விதத்தில் வித்தியாசம் இருக்கும் என்று சமாளிக்கிறார்கள், இரு தரப்பு படக்குழு ஆட்கள்.
—