‘மக்கள் செல்வன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி, நாயகனாக மட்டுமின்றி , வில்லனாகவும் நடித்து வருகிறார்,
ரஜினிகாந்த் கடைசியாக பெரிய ஹிட் கொடுத்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன்.
கமலுக்கும், அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்கும் பணம் அள்ளித்தந்த ‘விக்ரம் -2’ படத்திலும் அவரே வில்லன்.
விஜயை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்ற ‘மாஸ்டர்’ படத்திலும் விஜய் சேதுபதிதான் வில்லன்.
இப்போது அவர், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சி ஏரியாவில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு ஓய்வின்போது, பெரம்பலூரில் உள்ள கல்லூரி விழாவில் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி.
அவரிடம் “அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?” என்று மாணவர்கள் வினா எழுப்பினர்.
அதற்கு விஜய் சேதுபதி,’நிறைய பேர் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள்- இதற்கு முன்பு அஜித்துடன் நடிப்பதாக இருந்தது. ஆனால், நடக்கவில்லை – அஜித் சார் சிறந்த நடிகர், சிறந்த மனிதர்- இதுவரை நடந்தது எதையும் நான் திட்டமிடவில்லை- ஒரு நல்ல தருணத்தில், அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் –அது நடந்துவிடும் என நினைக்கிறேன்” என்று பதிலளித்தார்.
மாணவர்களுக்கு சில அட்வைஸ்களையும் அள்ளி தெளித்தார்.
‘வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்.-சமூக வலைத்தளத்தைப் பாருங்கள்- அதில் தவறில்லை- அதில் எது தேவை,எது தேவையில்லை என்று பிரித்து பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் நம்பாதீர்கள்- உங்களுடைய மூளையை குறிவைத்து வலைத்தளங்களில் நிறைய குப்பைகள் இருக்கின்றன’என்றார், விஜய் சேதுபதி.
–