தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு உள்ளது உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவை வெளிப்படுத்தி இருப்பதால் கட்சியில் அவர் கை ஓங்கி இருக்கிறது.
தேசியவாத காங்கிரசில் யாருக்கு அதிக பலம் உள்ளது என்பதை காட்டுவதற்கு கட்சித் தலைவர் சரத் பவாரும், அணி மாறி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற அஜித் பவாரும் மும்பையில் தனித்தனி கூட்டங்களை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சரத்பவார் அணி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 12 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அஜித் பவார் நடத்தியக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 30 பேரும் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அஜித்பவாருக்கு ஆதரவாக பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.
இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் தரப்பில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்குப் போட்டியாக அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சர் பதவி ஏற்ற 8 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் மனு தந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் சரத் பவார் தரப்பு தெரிவித்து இருக்கிறது.
எனவே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ள அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரும் சின்னமும் கிடைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் விரக்தியுற்ற சரத்பவார், மராட்டியத்தில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவுக்கு ஏற்பட்ட நிலைமை தனக்கும் ஏற்படலாம் என்று வேதனை தெரிவித்து உள்ளார். இது மட்டுமில்லாமல் தனக்கு அதிகாரத்தின் மீது ஆசை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
000