ஆகஸ்டு, 27
மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் ஓபிஎஸ்சுக்கு அண்மையில் மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைக்கு அதிமுக சென்ற பின், ஓபிஎஸ் டம்மியாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அதிமுகவை விட்டே அவர் நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறார். தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்துள்ளது. உச்சநீதிமன்றமும் எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அடி மேல் அடி விழுந்தாலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அசறுவதாக இல்லை.தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் அணியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்படி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே அவருடன் உள்ளனர். ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். எங்களது சட்ட போராட்டமும், அரசியல் போராட்டமும் தொடரும் என்றார். ’’சட்டபோராட்டங்களை தொடருவேன்’ என ஓபிஎஸ்சும் அறிவித்துள்ளார். இதில் அவருக்கு வெற்றி கிடைக்காது என சட்ட நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஓபிஎஸ் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பாஜக தலைமையும் அவரை கை விட்டு விட்டது. தன்னை நிலை நிறுத்த, ஓபிஎஸ் முன் உள்ள ஒரே வாய்ப்பு மக்களவை தேர்தல்தான். இன்னும் சில மாதங்களில் நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் ஜெயித்தால் மட்டுமே அவருக்கு எதிர்காலம் உண்டு.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி ஓபிஎஸ் காஞ்சிபுரத்திரத்தில் இருந்து புரட்சிபயணம் தொடங்குகிறார்.’’அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்’ என அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ.ஜேசிடி பிரபாகரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓபிஎஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ்சுடன் இன்னமும் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒட்டிகொண்டிருப்பது மட்டுமே அவருக்கான ஒரே ’பூஸ்ட்’.