June 06,23
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் இந்த காற்றழுத்தம் தீவிர புயலாக வலுவடையும் என்றும் ஐரோப்பிய வானிலை மையம் கடந்த வாரமே தனது வானிலை முன்னறிவிப்பில் அறிவித்தது. இதனை இந்திய தனியார் வானிலை ஆய்வாளர்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்து வந்தனர்.
இந்நிலையில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை மையம் கடந்த வார இறுதியில் தெரிவித்தது. இதனிடையே கேரளா மற்றும் கர்நாடாக கடலோர பகுதிகளில் ப்ரீ மான்சூன் எனப்படும் பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருவதாகவும் தெரிவித்தது. மேலும் வெப்ப மண்டல புயலால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என்றம இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 3 நாட்களுக்குள் கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. அரபிக் கடலில் உருவாகும் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை அடுத்த ஓரிரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு சற்று தாமதமாகும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த வார இறுதியில் பருவ மழை தொங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் இன்னும் பருவமழை தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.