June 19, 23
தமிழநாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது..
” தமிழ் நாட்டின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்து 24 மணிநேரத்திற்கு மழை தொடரும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழக கடற்கரை பகுதி, குமரிக்கடல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி அது மெதுவாக நகர்ந்து வருகிறது. . இது மெதுவாக வடதிசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதனால் இந்த மழை 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும். 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் கனமழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு :- மீனம்பாக்கம்-16 செ.மீ., பெருங்குடி-16 செ.மீ., ஆலந்தூர்-15.6 செ.மீ., அடையாறு-13.6 செ.மீ., முகலிவாக்கம்-13.5 செ.மீ., ராயபுரம்-13.3 செ.மீ., வளசரவாக்கம்-11.3 செ.மீ., செம்பரம்பாக்கம்-10.7 செ.மீ., அண்ணா நகர்-10.1 செ.மீ., மதுரவாயல்-10.1 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம்- 9.6 செ.மீ., தரமணி-12 செ.மீ., ஜமீன் கொரட்டூர்-8.4 செ.மீ. நுங்கம்பாக்கம்-8.4 செ.மீ. பூந்தமல்லி- 7.4 செ.மீ. என மழை பதிவாகியுள்ளது” என பாலசந்திரன் கூறினார்.