ஏப்ரல்.28
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் நடத்தும் சைபர் கிரைம் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், இந்திய ராணுவத்தில் நிபுணர்கள் அடங்கிய புதிய பிரிவைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவும் அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்கு நீண்டகாலமாக இருந்துவருகிறது.
அதேபோல், சீனாவும் தன் ராணுவ பலத்தை பயன்படுத்தி மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, சைபர் எனப்படும் இணையவழி வாயிலாகவும் இந்நாடுகள் இந்தியாவுக்கு எதிரான போர்களில் ஈடுபட்டு வருகின்றன. நம் நாட்டின் இணைய தளங்களை அவ்வப்போது முடக்குவதுடன், ராணுவத்தின் இணையதளங்கள் மீதும் இந்த நாடுகள் தாக்குதல்கள் நடத்திருவருகின்றன.
இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், தடுக்கவும், நிபுணர்கள் அடங்கிய சைபர் போர் தடுப்பு படைப் பிரிவை உருவாக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தலைமையில் சமீபத்தில் ராணுவப் படைப் பிரிவுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அண்டை நாடுகளின் சைபர் கிரைம் தாக்குதலை எதிர்கொள்வதற்காக சிறப்பு பிரிவை உருவாக்குவது தொடர்பான விவாதிக்கப்பட்டது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.