“அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே !”

தமிழர் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 96 ஆவது பிறந்தநாள், இன்று.

எழுத்தாளர்,கவிஞர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர்,மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்,கண்ணதாசன்.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியை சேர்ந்த சாத்தப்பா- விசாலாட்சி தம்பதியின் எட்டாவது குழந்தை கண்ணதாசன். சிறு வயதிலேயே பழனியப்பன் -சிகப்பி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு தத்து கொடுக்கப்பட்ட அவர், பெற்றோர் தனக்கு சூட்டிய முத்தையா எனும் பெயரை பிற்காலத்தில் கண்ணதாசன் என தத்தெடுத்துக்கொண்டார்.

பிஞ்சு பருவத்திலேயே கதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டதால், இந்த ஞானக்குழந்தை எட்டாவது வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு சென்னைக்கு ஓடிவந்து விட்டது.

பத்திரிகை ஒன்றில் பிழை திருத்துபவராக கவியரசர் தனது எழுத்துப்பணியை துவக்கினார். அவர் எழுதிய கதைகள் பல இதழ்களில் வெளிவந்தன.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிக்க கே.ராம்நாத் இயக்கிய கன்னியின் காதலி படத்துக்காக ‘கலங்கா திருமனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே ’ என்ற பாடல்தான் அவர் சினிமாவுக்கு எழுதிய முதல்பாட்டு.

எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் தீட்டிய ‘அச்சம் என்பது மடமையடா’ உலகம் பிறந்தது எனக்காக’ ‘நாடு அதை நாடு’’ அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்’ போன்ற பாடல்கள் எம்.ஜி.ஆர்  அரசியலில் நுழைவதற்கு அடித்தளமிட்டன.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்கள் எழுதிய கவியரசர், காஞ்சி சங்கராச்சாரியாரின் உபதேசத்தின் பேரில் உருவாக்கிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’  இந்துக்களுக்கு இன்னொரு வேதம்.

மதபேதமில்லாத ஞானக்கவி படைத்த மற்றொரு காவியம் ‘இயேசு காவியம்’.

கவியரசர் செதுக்கிய பல பாடல்கள், அவரது  அனுபவத்தில் இருந்து கிளர்ந்து எழுந்தவை.

அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், ஏதோ சொல்லி விட்டார்.அந்த ஆதங்கத்தை ‘சொன்னது நீதானா? சொல்..சொல்’ என தனது பாடலில் கொட்டினார், கண்ணதாசன் .

சகோதரரிடம் அவசர செலவுக்கு பணம் கேட்டார்.அவர் கொடுக்கவில்லை. அந்த ஆத்திரத்தை ‘அண்ணன் என்னடா! தம்பி  என்னடா! அவசரமான உலகத்திலே’’ என பாடலாக வடித்திருந்தார்.

காமராஜரோடு சின்ன பிணக்கு.

தன்னை மீண்டும் இணைத்து கொள்ளுமாறு,பெருந்தலைவருக்கு  அவர் விடுத்த வேண்டுகோள் தான் ’அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ பாடல்.

முழுநிலவாய் திரையில் ஜொலித்த கவியரசர், மூன்றாம் பிறை படத்துக்காக எழுதிய ‘கண்ணே கலைமானே’’ பாடல், அவரது கடைசி பாடலாக அமைந்தது.

’இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?’’ என அவர் ஒரு பாடலில் கேள்வி கேட்டிருப்பார்.தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை , கண்ணதாசன் மக்கள் மனதில் நிலையாய் வாழ்ந்து கொண்டிருப்பார்.

சினிமேன்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *