ஏப்ரல்.21
திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று தொடங்கவுள்ள புத்தக கண்காட்சி திருவிழாவை முன்னிட்டுபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ராட்சச பலூனை பறக்க விட்டார். மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்தில் ராட்சத பலூனை அவர் பறக்கவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் தாசில்தார் செல்வகுமார், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கனிமொழி, தூத்துக்குடியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையை வாசிப்பு திறனை வளர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசியுடன் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. 110 அரங்குகளுடன் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை திமுக பற்றிய சொத்து பட்டியல் வெளியிட்டது சம்பந்தமான கேள்விக்கு நிச்சயம் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.