அண்ணாமலை பிறந்த நாளை கொண்டாடிய அதிமுக நிர்வாகியின் பதவி பறிப்பு- எடப்பாடி அதிரடி.

ஜுலை,06- தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் முரளி திண்டிவனத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார். இது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவலி பேரவைச் செயலாளர் என்ற பொறுப்பையும் வகித்து வந்தார். இவருடைய மகன் அரிகிருட்டிணன் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி ஆவார். அப்பாவும் மகனும் சேர்ந்து அறக்கட்டளை ஒன்றையும் நடத்த வருகின்றனர்.

இந்த அறக்கட்டளை சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலையின் 39- வது பிறந்த நாளை முன்னிட்டு 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அண்ணாமலையை முரளி தமது மகனோடு சேர்ந்து உபசரித்து மகிழ்ந்தார்.

இது பற்றிய தகவலை புகைப்பட ஆதாரங்களோடு பார்த்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக முரளியை விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.

அதிமுகவும் பாரதீய ஜனதாவும் ஒரே கூட்டணியில் இருந்த போதிலும் எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் மோதலான போக்குதான் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அதனால் தான் அண்ணாமலை பிறந்த நாளை கொண்டாடிய அதிமுக நிர்வாகியின் பதவியை எடப்பாடி பறித்து உள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *