டிசம்பர்-28,
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
வழக்கறிஞர்கள் இருவர் தாக்கல் செய்த பொது நல மனுக்களை இரண்டாவது நாளாக விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.
உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது…
அண்ணா பல்கலைக் கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிகவும் மோசமாக உள்ளது. புகார் அளிக்க வந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறும்போது, ஒரு காவல்துறை அதிகாரி கூட உதவி செய்யாதது கண்டிக்கத் தக்கது.
பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு முடியும்வரை அவரிடம், எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது, ஏற்றுக்கொள்ள முடியாதது; துரதிஷ்டமானது.
பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆணும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக் கூடாது? விருப்பப்படி ஏன் உடை அணியக் கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது?
அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.
மாறாக, பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது.
ஊடகங்களால்தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊடகங்கள் எதிரிகள் அல்ல-
பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் இழப்பீடு வழங்குவதற்கு உத்தரவிடப்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்று முதல் தகவல் அறிக்கை வெளியே கசியாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துள்ளதாக கூறப்பட்ட வாதம் கண்டனத்துக்கு உரியது. யாருடன் யார் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஜ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கை விசாரிப்பதற்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆளுநர் ஆய்வு.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம்; அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு.
ஆளுநருடன் உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
*