ஏப்ரல்.21
அதிமுகவின் பெயர் மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ்., சசிகலா உட்பட யார் பயன்படுத்தினாலும் சட்டப்படி அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஏற்கப்பட்டது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன், ‘எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத் தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி என்ற வரலாற்று சாதனையை படைப்போம். 2026-ம் ஆண்டு ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைவதற்கு இந்தத் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்’ என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், ‘அ.தி.மு.க பெயர், சின்னத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சின்னத்தைப் பயன்படுத்துவோர் சசிகலா உட்பட யாராக இருந்தாலும் வழக்கு தொடரப்படும்’ என்று அப்போது அவர் எச்சரிக்கை விடுத்தார்.