மக்களவை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. ‘’மூன்றாம் முறையாக மோடி பிரதமர்ஆவார்’என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் கள நிலவரம் கலவரமாகவே உள்ளது.
கடந்த தேர்தலில் பாஜகவுடன் இருந்த பிரதான கட்சிகள் அனைத்துமே அங்கிருந்து வெளியே வந்து விட்டன.ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ( தாக்கரே )போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி,எதிர்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ அணியில் ஐக்கியமாகி உள்ளன.
கடந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.ஒரு இடத்திலும் ஜெயிக்க வில்லை.இந்த முறையும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என எதிர் பார்க்கப்பட்டது.ஆனால் உள்ளூர் தலைவர்கள்’தெருச்சண்டை’ ரேஞ்சுக்கு வார்த்தைகளை அள்ளி வீசுவதை பார்த்தால், கூட்டணி நீடிக்காது என்றே தோன்றுகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை மதுரையில் தெரிவித்தார்.இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் அளித்த பதில், காட்டமாக இருந்தது.
‘எங்களை வாழ வைத்த தலைவர்கள் குறித்து பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்-தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள, ‘நானும் ரவுடிதான்’என வடிவேலு சொல்வது போல் அண்ணாமலை பேசி வருகிறார்-இந்த கூட்டணியை முறிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார்-அவர் தொடர்ந்து இதுபோல் பேசினால், நாங்களும் ’ஒரு முடிவு ‘எடுக்க நேரிடும்’ என எச்சரித்தார்.
“அண்ணாமலையின் நடைபயணம் என்பது வசூல் பயணம். அதிமுக துணையில்லாமல் பாஜக வெற்றிபெற முடியாது” என்றும் சண்முகம் கிண்டல் அடித்தார்.இதற்கு அண்ணாமலை சுடச்சுட பதில் அளித்துள்ளார்.
“இதற்கு முன்பு தமிழகத்தில் யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்து பழக்கப்பட்டுள்ளார்களோ, அவர்கள் அனைத்தையும் வசூலாக பார்க்கிறார்கள். அவருக்கு வசூல் செய்துதான் பழக்கம். அவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்ததே வசூலுக்காகதான். அதனால் நானும் நடைப்பயணம் சென்றால் அது வசூலுக்கு என நினைத்து கொள்கிறார்கள். வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது. தூற்றுபவர்கள் தூற்றட்டும்.’என அண்ணாமலை ஆத்திரத்தை கொட்டி தீர்த்தார்.
’’சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு பின்பு வேறு மாதிரி பேசுவார். அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும்.’என்று சண்முகத்தை தனிப்பட்ட முறையிலும் அர்ஜனை செய்தார், அண்ணாமலை.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் பாஜகவுக்கு வெற்றி கிட்டாது என்பதால் அண்ணாமலை இப்படி பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-பாரதி.