June 13, 23
அண்ணாமலையின் பேச்சிற்கு அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் அளித்துள்ள பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு காட்டமான கருத்துகளை அண்ணாமலை மீது முன்வைத்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏனெனில் அதிமுக – பாஜக இடையிலான கூட்டணியில் மீண்டும் உரசல் அதிகரித்துள்ளது. சமீபத்திய மோதலுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக குறித்தும் சில விஷயங்களை பேசியுள்ளார். இதனை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். இதன் தொடர்ச்சியாக அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் இன்று பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், எங்கள் புரட்சி தலைவி ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு எந்த தராதரமும் அண்ணாமலைக்கு இல்லை. ஊழலை பற்றி பேசுவதற்கு தகுதி அற்றவர். ஒரு கவுன்சிலராக கூட இல்லாத அண்ணாமலை மீது அவரது கட்சியினரே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.
சமூகத்தை சீரழிக்கும் வேலைகளில் ஈடுபடும் நபர்களை கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுத்தவர் தான் அண்ணாமலை. மன்மோகன் சிங் முதல் நரேந்திர மோடி வரை போயஸ் தோட்டத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்து விட்டு சென்றுள்ளனர். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க தலைவரை பற்றி பேசுவதற்கு முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை.
இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்றால் அது பாஜகவின் தலைவர் தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திக்க வாய்ப்பில்லை. அப்போது ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மாமூல் வாங்கி கொண்டு இருந்திருப்பார். 40 சதவீத கமிஷன் வாங்கி கொண்டு அதன் விளைவாக படுதோல்வியை சந்தித்தது பாஜக ஆட்சி.
அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளனர். அதுவும் அண்ணாமலையை வைத்து கொண்டு, அவர் தலையில் கொட்டுவது போல சொன்ன வார்த்தை. இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புவதாக ஒருமுறை அல்ல. இருமுறை கூறியிருக்கின்றனர். டெல்லியில் அமித் ஷா பேசும் போதே அண்ணாமலை கூறியிருக்க வேண்டாமா?
கூட்டணி வேண்டாமா?
அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்களுக்கு அதிமுக பிடிக்கவில்லை எனில் போக வேண்டியது தானே? ஏன் எங்களை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள்? திமுக உடன் பாஜக கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைக்கு வருகிறார்கள் என்பதை யார் சொன்னார்கள்? தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான். எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.