ஏப்ரல்.20
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கவும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 10 நாட்களில் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நாளையோடு முடிவடையுள்ள நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில கட்சியாக உள்ள அதிமுகவிற்கு குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அதிமுக சார்பில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று அதிமுக சார்பில் கர்நாடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், தற்போது அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டுமே தற்போது அவரின் வசமாகியுள்ளது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.