ஒருவரையொருவர் திட்டும் தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
அண்மையில் நடந்த முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவைகளை முடக்கின. இந்நிலையில், சில தலைவர்கள் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அநாகரீகமாக நடந்து கொள்வதை நாட்டு மக்கள் கவனித்து வருகிறார்கள் என்று முன்னாள் துணை குடியரசு தலைவர் எம். வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர பிரதேசம் விஜயநகரில் ராஜம் ஜி.எம்.ஆரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறியதாவது: ஒருவரையொருவர் திட்டும் தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். சில தலைவர்கள் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அநாகரீகமாக நடந்து கொள்வதை நாடு முழுவதும் அவதானித்து வருகிறது. சில தலைவர்களின் அநாகரீகமான நடத்தையை நாம் ஊக்குவிக்கக் கூடாது.
அநாகரீகமான தலைவர்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக்கூடாது, அவர்களுக்கு ஒட்டு போடக்கூடாது. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளை பொதுமக்கள் பார்ப்பது வழக்கம். தலைவர்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்யாமல் மக்கள் நலன் பற்றி பேச வேண்டும். இளைஞர்கள் நல்ல அரசியல்வாதிகளை ஆதரித்து அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். இளைஞர்களும் நல்ல அரசியல்வாதிகளை ஆதரித்து அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். இளைஞர்களும் அரசியலில் வாய்ப்பு பெறலாம். இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.