அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்த கலக்கத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் ஏளனம் பேசியுள்ளார்.
சென்னையை அடுத்த புழலில் அதிமுக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது ஜெயக்குமார் பேசியதாவது..
திமுக ஆட்சியை விதி 356- ஐப் பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். டிஸ்மிஸ் ராசி திமுக விற்கு அதிகமாக உள்ளது. துரியோதனன் வீழ்ந்தது சகுனி மற்றும் துட்சாதணனால் தான். அதுபோல திமுகவில் சகுனிகளும் துட்சாதணன்களும் நிறையவே உள்ளனர். அவர்களால் திமுக அழிந்துவிடும்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டு பையனாக வரலாறு தெரியாமல் பேசி வருகிறார்.திமுக அரசு 500 மதுக்கடைகளை மூடியது. வருமானம் குறைவாக இருந்த கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. ஆட்சியில் இல்லாத போது திமுகவினர் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை.
கடல் அரிப்பு உள்ள இடத்தில் பேனா சிலை வைப்பது முறையல்ல. அதனால், மக்களின் வரிப்பணம் வீணாகும். திமுக அறக்கட்டளையில் இருந்து பணம் செலவு செய்து கலைஞர் கோட்டம் அமைத்தது போல, அறக்கட்டளையில் இருந்து பணம் எடுத்து அறிவாலயத்தில் வைக்கட்டும். கடலில் பேனா சிலை வைப்பதற்கு அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சட்டபூர்வமாக அதிமுக சார்பில் எதிர்கொள்வோம். திமுக அமைச்சர்கள் மீது விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆபரேசன் நடைபெற உள்ளது.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.