மே.11
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா இன்று பதவியேற்கிறார்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றம், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களின் வரிசையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது அரசியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா இணைக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி ராஜா, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றப்பிறகு அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவுள்ளது. அதேபோல், ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிவிப்பின்போது, புதிதாகப் பொறுப்பேற்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கான இலாகா என்ன என்பது தெரியவரும். இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.