அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 1440!

June 15,23

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான எண் 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும், காவேரி மருத்துவமனையில் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளையும் ஓமந்தூரர் மருத்துவர்கள் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் 1440 வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *