அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யுங்கள்..! ஆளுநருக்கு அண்ணாமலை கோரிக்கை..!!

மே.20

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் வி.எல் சந்தோஷ் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, உட்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்துவிட்டு, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதை வருகின்ற மே 30ஆம் தேதி முதல் ஜீன் 30ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பாஜக கொண்டாட உள்ளது. பிரதமரின் சாதனைகள், அதனால் தமிழகத்திற்கு கிடைத்த பயன்கள், மக்கள் எப்படி முன்னேறி உள்ளார்கள், அரசின் திட்டங்கள் பட்டி தொட்டி எல்லாம் எவ்வாறு சென்றுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒரு மாத காலம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

கள்ளச்சாரயம் பட்டிதொட்டி எங்கும் புழங்க ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் விழுப்புரம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்கிறோம். ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாரயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள்.

நாளை (மே.21) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து, கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜக குழுவினர் மனு அளிக்க உள்ளோம். அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும். அவரை நீக்கக்கோரி முதலமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது முடியாது. அவரை நீக்க ஆளுநர், முதலமைச்சருக்கு வலியுறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடும் குதிரைபோல எல்லா பக்கமும் மது ஓடிக்கொண்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு தமிழகத்தை குடிகார மாநிலமாக்குவதை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கை கட்டுப்படுத்தினால், கள்ளச்சாரயம் கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *