ஏப்ரல் 18
நாட்டின் அரசியலில் குதிரை பேரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் ஒரு புதிய மாதிரியை மோடியும் அமித் ஷாவும் உருவாக்கியுள்ளனர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அசொக் கெலாட் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் இருந்து ஒரு வீடியோ கான்பரன்சிங்கில் (வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்கவிழா) உரையாற்றினார். அவர் (மோடி) தனது உரையை என் நண்பர் அசோக் கெலாட் என்று தொடங்கினார்.
இது புத்திசாலித்தனம். இந்த வித்தைகள் எல்லாம் எனக்கு புரிகிறது. நானும் நீண்ட நாட்களாக அரசியல் செய்து வருகிறேன். தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, நாட்டிலுள்ள அனைத்து முதல்வர்களிலும் மூத்தவர் அசோக் கெலாட் என்று பிரதமர் மோடியை கூறினார். நான் மூத்தவனாக இருக்கும்போது, எனது ஆலோசனையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நாடு முழுவதும் பிரதமர் அமல்படுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். இதுவே உங்களுக்கு முதல் அறிவுரை. ராஜஸ்தானுக்கு நாங்கள் செய்த திட்டத்தை நீங்கள் நாட்டுக்காக செயல்படுத்த வேண்டும். நாட்டின் அரசியலில் குதிரை பேரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் ஒரு புதிய மாதிரியை மோடியும் அமித் ஷாவும் உருவாக்கியுள்ளனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் குதிரை பேரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.