தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறையின் 2021-22 ஆம் ஆண்டுக்கான மான்யக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.
இந்த நிலையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டுள்ளது.ஒரு குடும்பத்தில் யார், யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ் கிடைக்கும் என்பன உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளும் அந்த ஆணையில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
*ஒரு குடும்பத்தில் 2 பேர் இருந்தால், யார் முதலில் பட்டப்படிப்பை முடிக்கிறார்களோ, அவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம்.
*இருவரும் ஒரே ஆண்டில் முடித்திருந்தால், தேர்ச்சி அடைந்த மாதத்தை கணக்கில் கொண்டுமுதலில் முடித்தவருக்கு வழங்கலாம்.
*இவ்வாறு சான்றிதழ் பெறும் பட்டதாரி, வேலைக்கு சேர்வதற்கு முன்னர், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டால், குடும்பத்தில் 2- வது பட்டதாரிக்கு முதல் தலை முறை பட்டதாரி சான்றிதழ் வழங்க பரிசீலனை செய்யலாம்.
* மனைவி , மகன், மகள்களுடன் இணைந்து அண்ணன் -தம்பிகள் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் இருந்தால், அந்த குடும்பத்தில் முதலில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
*இரட்டை குழந்தைகளாக இருந்தால்,குடும்பத்தில் பட்டதாரி இல்லாத நிலை இருந்தால் முதல் பட்டதாரி சலுகையை இரட்டையர்கள் இருவருக்கும் வழங்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் பொது இ- சேவை மையத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.குறுஞ்செய்தி வந்தவுடன், இணைய வழியில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீங்கள் முதல் தலைமுறை பட்டதாரி என்றால் கவலை வேண்டாம். அரசு வேலை நிச்சயம்.
000