ஜுலை,25-
தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை கொஞ்சம் கலங்கத்தான் செய்திருக்கிறது.
சாப்பாட்டு அரிசி 25 கிலோ கொண்ட மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. இந்த அரிசியின் விலை சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. 25 கிலோ சிப்பம், ஆயிரத்து 200 ஆக இருந்த இரண்டாம் தர அரிசி, ஆயிரத்து 400 ரூபாயாகவும், இட்லி அரிசி 850 ரூபாயிலிருந்து 950 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
பைக்குள் அடைத்து விற்கப்படும் அரிசி, சோளம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் கடந்த வாரத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதற்கு அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அரிசி விலை உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
உலக நாடுகளுக்கு 40 சதவீதம் அரிசி இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. இதில் 25 சதவீதம் மட்டுமே பாசுமதி அரிசியாகும். எஞ்சிய 75 சதவீதம், வழக்கமான அரிசிதான். இந்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், உலகம் முழுவதுமே அரிசி விலை அதிகரிக்கும் என்ற கருத்து நிலகிறது.
கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பெரும்பாலான மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இவற்றில் எதன் விலையும் இன்னும் குறைந்த பாடில்லை.விலை உயர்த்தப்பட்ட பொருட்களின் விலையை வியாபாரிகள் மீண்டும் குறைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இவை ஒரு புறமிருகக் ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடரின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி இருக்கிறது.
ஒரு கிலோ பன்னீர் விலை ரூ.450- லிருந்து ரூ.550 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.பாதாம் பவுடர் 200 கிராம் ரூ.100-க்கு விற்க்கப்பட்ட நிலையில் ரூ.120- க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்து என்னப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதுதான் இப்போது பேச்சாக உள்ளது.
000