ஏப்ரல்.26
அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ராகுல்காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தததோடு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்தது.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்தனர். அவதூறு வழக்கில் தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்த ராகுல் காந்தி, இதற்கு நிவாரணம் தேடும் வகையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.