அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஆக்சிஜன் இன்றுடன் தீர்ந்து விடும் என்பதால் பதற்றம் கூடியிருக்கிறது. இதனால் அந்தக் கப்பலில் இருந்த 5 பேரையும் விரைவாக மீட்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுக் கடலோரக் காவல் படைகள் தீவிரப்படுத்தி உள்ளன.
அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெறும் தேடுதல் பணியின் போது, கடலுக்கடியில் ஓரிடத்திலிருந்து சத்தம் கேட்டது கண்டறியப்பட்டுள்ளது ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரத்தைச் சேர்ந்த ஓசோன் கேட் என்ற நிறுவனம் பயணிகளை நீர் மூழ்கிக் கப்பல் மூலம் அழைத்துச் சென்று அட்லாண்டிக் கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காட்டும் சுற்றுலாவை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.. இதற்காக 22 அடி நீளம் மட்டுமே கொண்ட “டைட்டன்” என்ற நீர்மூழ்கிக் கப்பலை அந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த முறை அந்தக் கப்பலில் ஐந்து பேர் சென்றனர். அனைவருமே பெரும் கோடீஸ்வரர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் சாகச வீரரும் தொழிலதிபருமான ஹமீஸ் ஹார்டிங்,வயது- 58, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கடலியல் நிபுணர் பால் ஹென்றி, வயது-77, டைட்டானிக் சுற்றுலாவை நடத்தும் ஓசோன் கேட் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், வயது 61, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஷசாதா தாவூத்,வயது-48, அவருடைய மகன் சுலைமான், வயது-19. இவர்கள்தான் “டைட்டன்” நீ்ழ்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தவர்கள் ஆவர்.
அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்தின் மேற்பரப்பிற்கு போலோ பிரின்ஸ் என்றக் கப்பல் மூலம் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஞாயிற்றுக் கிழமை காலை ஆறு மணிக்கு இவர்கள் ஐந்து பேரையும் “டைட்டன்” நீர்மூழ்கிக் கப்பல் ஏற்றிக் கொண்டு ஆழ்கடலுக்குள் இறங்கியது. அன்று மாலையே போலோ பிரின்ஸ் கப்பலுக்கு இவர்களின் “டைட்டான்” நீர்மூழ்கிக் கப்பல் திரும்பி விட வேண்டும் என்பது திட்டம். ஆனால் புறப்பட்ட 100 நிமிடங்களியே அது போலோ பிரின்ஸ் கப்பலுடனான தொடர்பை இழந்துவிட்டது.
இதையடுத்து “டைட்டன்” நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் கடலோர காவல் படைக் கப்பல்கள் தேடுவதற்கு ஆரம்பித்துவிட்டன. 111 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய டைட்டானிக் கப்பல் சுமார் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடக்கிறது. அவ்வளவு ஆழத்தில் 21 அடி நீளமுள்ள நீழ்மூழ்கிக் கப்பலை தேடும் பணி ஆழ்கடல் வீரர்களுக்கு பெரும் சவலாக இருந்து வருகிறது. தேடுதல் பணி இன்று நான்காவது நாளாக தொடருகிறது.
இந்நிலையில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கனடா விமானப்படை விமானம் ஒன்று, டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள பகுதியில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒன்றோடு ஒன்று இடித்துக் கொள்வதுப் போன்ற விநோத சத்தம் கேட்பதை கண்டறிந்து உள்ளது. உடனே அந்த இடத்தில் நீர் மூழ்கியை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
மாயமான “டைட்டன்” நீர்மூழ்கிக் கப்பல் 96 மணி நேரம் வரை கடலுக்கடியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் படி, அமெரிக்கா நேரப்படி வியாழக் கிழமை காலையோடு கப்பலில் ஆக்சிஜன் இருப்புத் தீர்ந்துவிடும். இதனால் டைட்டன் நீர் மூழ்கிக் கப்பலை மீட்க முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
டைட்டானிக் வரலாறு.
இங்கிலாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்ட டைட்டானிக் என்ற சொகுக் கப்பல் தனது முதல் பயணத்தின் போதே1912 -ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் தேதி பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளானது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்கள் இடையில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த விபத்து நேரிட்டது. கப்பலில் இருந்த 2,224 பேரில் 1,600 பேர் இறந்துவிட்டனர். பல ஆண்டுகள் நடைபெறற தேடுதல் பணிக்குப் பிறகு கனடா நாட்டின் நியூ பவுண்ட்லாந்து தீவு அருகே 1985 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சரியாக 111 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து நடைபெற்றாலும் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் என்ற ஆங்கில திரைப்படம் அந்த விபத்தை இந்த நூற்றாண்டில் வசிக்கும் மக்கள் முன் கொண்டு வந்தது. பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்பபடம் மிகப்பெரிய வெற்றிப்படமாகும்.அதன் பிறகு டைட்டானிக் பற்றிய பேச்சு எங்கும் பரவியது.
இதையடுத்து டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்க்க வேண்டும் என்ற விநோத ஆசை சிலருக்கு ஏற்பட்டது. இந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக வாஷி்ங்டன் நகரத்தை மையமாகக் கொண்ட ஓசோன் கேட் என்ற நிறுவனம் நீர்மூழ்கி சுற்றுலாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
“டைட்டன்”s நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஐந்து பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
000