அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கு பேட்டி கொடுத்தாலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐந்து நிமிட பேட்டி என்றாலும் அதில் ஒரு பொடி வைத்து பேசுவதில் வல்லவர்.
சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்தார்.பின்னர் சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு..
“அம்மாவின் ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தோம். கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு ஆறு மாத காலம் மன அழுத்தம் இருந்ததாக சொல்கிறார்கள். மன அழுத்தம் இருக்கும் நபருக்கு ஏன் அதிக பணிகளை வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. அதனால் காவல் துறை அதிகாரி ஒருவரை இழக்க நேரிட்டு இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநர் டெல்லி சென்று இருப்பதை நாளேடுகளில் வெளியான செய்தி மூலம் தெரிந்து கொண்டேன்.அவர் எதற்காக டெல்லி சென்றார் என்று தெரியவில்லை.
திமுக நடுங்கிபோய் இருக்கின்றது. அதிமுக யாருக்கும் நடுங்கி பயந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக தான் அடிமை கட்சி. அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. அந்தக் க கட்சிக்கு கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாது. அவர்கள் ஆட்சிக்கு வர என்னவேண்டுமானலும் செய்வார்கள். ஆனால் அதிமுக அப்படிப்பட்ட கட்சி இல்லை. மக்களை பற்றி என்றும் கவலைபடும் கட்சியாக உள்ளது.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போது எல்லாம் விலை வாசி உயர்வது வழக்கமாக உள்ளது. இப்போது 70 சதவிகிதம் விலை வாசி உயர்ந்திருக்கிறது. தகுதியற்ற ஆட்சியினால்தான் விலைவாசி அதிகரிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவம் செய்கிறார்கள். சளிக்கு ஊசி போட போனால் நாய்கடிக்கு ஊசி போடும் அவலம் நடைபெறுகிறது.
இப்போது அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. அதற்கு முன்னோட்டமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேட்டியில் தெரிவித்தார்.
000