மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களோ, மாநில தலைவரை உடனடியாக மாற்றிவிட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் உள்ளனர்.
மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லிபறந்து சென்று அங்கு முகாமிட்டு உள்ளார். அழகிரி தலைவராக பதவி ஏற்று நான்கரை ஆண்டுகள் ஆகிறது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழக காங்கிரசில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் நீடிப்பது அழகிரி மட்டுமே.
கட்சி கோஷ்டி பூசலை ஓரளவு சமாளித்தது, கடந்த மக்களவை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 9 இடங்களில் 8 இடங்களில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்தது, அதேபோல் சட்டசபை தேர்தலில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு கொண்டு சென்றது , உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றி குவித்தது என அழகிரி,தன்னளவில் ஆரோக்கியமான பங்களிப்பை செய்துள்ளார்.
அண்மைக்காலமாக அவர் செயல்பாடுகளில் உள்ளூர் தலைவர்களுக்கு திருப்தி இல்லை.இதனால்தான் தலைவரை மாற்ற வேண்டும் என எதிர் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனை மேலிடம் ஏற்றுகொண்டு , அழகிரியை வரவழைத்து பேசியுள்ளது.
மக்களவை தேர்தல் வரை தன்னை தலைவராக தொடர விடுமாறு , தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயிடம் அவர் விடுத்த வேண்டுகோள் எடுபடவில்லை.
தாங்கள் பரிந்துரைக்கும் ஆட்களுக்கே பெரும்பாலும் எம்.பி. சீட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால், தலைவர் பதவியை கைப்பற்ற கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர், சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோரோடு எம்.எல்.ஏ.விஜயதாரணியும் முட்டி மோதுகிறார்.
இவர்களை அல்லாமல் ஐ.ஏ.எஸ்.வேலையை விட்டுத் தள்ளிவிட்டு காஙகிரசில் சேர்ந்த சசிகுமார் செந்தில் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத் தேர்தலில் இவரின் பணியும் காங்கிரஸ் வெற்றிக்கு ஒரு காரணம் என்ற கருத்து உள்ளது. இதனால் அண்ணாமலை ஐ.பி.எஸ். க்குப் போட்டியாக சசிகுமார் செந்தில் ஐ.ஏ.எஸ். தலைவராக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
000