பாகுபலி நாயகன் பிரபாசின் மற்றும் ஒரு மாபெரும் படைப்பு தான் ஆதி புருஷ். ஓம் ராவத் இயக்கி உள்ளார்.
திரைக்கு வரும் முன்பும் வந்த பிறகும் இந்த படம் சம்பாதித்து உள்ள சர்ச்சைகள் ஏராளம்.
தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ஆதி புருசுக்கு தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளும்படி வசூல் இல்லை. ஆனால் தெலுங்கில் முதல் நாளே ரூ 39 கோடி வசூலித்து உள்ளது. இது ஒரு சாதனை என்று படக்குழு பெருமைப் பட்டுக் கொள்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வசூலைக் கணக்கிட்ட பிறகுதான் படத்தின் வெற்றிப் பற்றி முழுமையாக சொல்லமுடியும்.
படத்தி்ன் டிரைய்லர் வெளியான போதே ஆதி புருஷுக்கு எதிர்ப்புகள் உருவானது. அனிமேஷன் சரியில்லை, கிராபிக்ஸ் குப்பையாக உள்ளது, குழந்தைகளுக்கான கார்டூன் படம் போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு வசை பாடினார்கள். இந்தக் குறைகளை எல்லாம் சரி செய்து விட்டோம் என்று இயக்குநர் உத்தரவாதம் கொடுத்திருந்தார். ஆனாலும் படத்தின் சில காட்சி அமைப்புகளில் மெருகு இல்லை. மெனக்கெடு போதாது.
என்.டி. ராமராவ், சிவாஜி கணேசன் நடித்த படங்களும் பிறகு தொலைக்காட்சியில் வெளியான ராமாயணம் தொடர்களும் இதிகாச அவதாரமான ராமரைப் பற்றி ஒரு தோற்றத்தை நம்முடைய மனதில் உருவாக்கி வைத்து இருக்கிறது. மீசை இல்லாத முகம் , மென்மையான பேச்சு, மென்மையான செயல்கள் போன்றவை ராமனைப் பற்றிய நம்முடைய அடையாளங்கள்.
ஆதிபுருஷில் ராமனாக வரும் பிரபாசு மீசையுடன் தோன்றுவது அனைவருக்குமே நெருடல் தான். ராமன் தோற்றத்தை இப்படி படைத்தது இயக்குநரின் விருப்பமா அல்லது பிரபாஸ் மீசையை எடுக்க மறுத்துவிட்டதாலா என்று வளைதளங்களில் பட்டிமன்றம் நடக்கிறது.
சீதை, லட்சுமணன் பாத்திரங்கள் படைப்பும் ரசிகர்களுக்கு முழு திருப்தி தரக்கூடியதாக இல்லை என்பதை நீங்கள் படத்தைப் பார்த்தால் சொல்வீர்கள்.
பல இடங்களில் காட்சிகள் இருளில் நடப்பதாக உள்ளதும் கதையிலிருந்து நம்மை அப்புறப் படுத்துவதாக உள்ளது.
இவை எல்லாம் காட்சிகளில் உள்ள குறைகள்.
நாடு கடந்த சர்ச்சை என்னவெனில் புராணப் பாத்திரமான சீதை இந்தியாவில் பிறந்தவர் என்பதுதான். சீதை நேபாளத்தில் உள்ள ஜானக் புரியில் பிறந்தவர் என்பது அங்கு உள்ளவர்களின் நம்பிக்கை. படத்தில் சீதை இந்தியாவின் மகள் என்று வரக்கூடிய வசனம் நேபாளத்தில் கடுமையான எதிரப்பை சம்பாதித்துக் கொடுத்து உள்ளது. ஆதிபுருசின் இந்தி மொழியாக்கம் தான் நேபாளத்தில் திரையிடப்பட்டு உள்ளது. அதில் சீதை பிறந்த இடம் பற்றிய வசனமே இருக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளார் காத்மண்டு நகர மேயர் பலேந்திர ஷா. காலம் காலமான எங்களின் நம்பிக்கையை சிதைத்தால் இனி எந்த இந்திப்படமும் தங்கள் நாட்டுக்குள் வரமுடியாது என்பது நேபாளிகளின் மிரட்டல். இதனால் அந்த வசனங்கள் நேபாளத்தில் ஓடும் படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
- பெரிய பட்ஜெட், கடுமையான உழைப்பு போன்றவை இருந்தும் குறைகள் அதிகம் தெரிவது படத்தின் பலஹீனம்.