தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வழி செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். தடையை மீறி இந்த விளையாட்டை விளையாடுவோருக்கான தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி 2022 அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால், அந்த அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் காலவதியானது. அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
பின்னர், 4 மாதங்கள் கழித்து, தமிழ்நாடு அரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்று கூறி ஆளுநர் மசோதாவை திருப்பியனுப்பினார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் கடந்த 24- ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது. மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் (ரம்மி, போக்கர் ) தடை போடப்படுகிறது. அதேபோல், எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், அதில் சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பன போன்ற பல்வேறு விதிமுறைகள் இந்தத் தடைச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆளுநர் இதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், விதிகளை மீறுவோருக்கு இந்தத் தடைச் சட்டத்தின்படி பல்வேறு தண்டனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிண சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை வழங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்ட நபர் அல்லது நிறுவனம் மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் சிறை தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.