காங்கிரஸ் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருக்கும் மாநிலத்தில் மூன்றாவது கட்சி ஒன்று முளைத்து, வலிமை பெற்றால், அங்கு, காங்கிரஸ் அழிந்து விடும் என்பது பல மாநிலங்களில் நிரூபணம் ஆன உண்மை.
இந்த உண்மையை , உலகுக்கு உணர்த்திய முதல் மாநிலம் தமிழகம். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி இருந்தது. அதிமுகவின் உதயம் காங்கிரசை அழித்து விட்டது. அதன் பின் பல மாநிலங்களில் புதிய கட்சிகள் உருவாகி, காங்கிரஸ் கட்சியை காலி செய்து விட்டன.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த பின், காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அங்கு ஜெகன் மற்றும் சந்திரபாபு இடையேதான் இப்போது போட்டி.
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கும் , மே.வங்கத்தில் மம்தாவும், புதுச்சேரியில் ரங்கசாமியும் தோற்றுவித்த கட்சிகள், காங்கிரசை மூன்றாம் இடத்துக்கு கொண்டு போய் சேர்த்து விட்டது.
டெல்லி நிலவரமும் அதுவே.
அரவிந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பிக்கும் வரை டெல்லியில் பாஜகவும், காங்கிரசும் தான் பிரதான கட்சிகளாக இருந்தன. கெஜ்ரிவால், ஆம் ஆத்மியை ஆரம்பித்து இரு தேசிய கட்சிகளின் வாக்குகளையும் தின்று விட்டார். எனினும் பலத்த சேதாரம் காங்கிரசுக்கே.
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஒரு இடத்திலும் காங்கிரஸ் ஜெயிக்க வில்லை.ஆனால் 22 சதவீத வாக்குகள் பெற்றது.பாஜக 57%.ஆம் ஆத்மி 18%.
ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, 54 சதவீத ஓட்டுகளை அள்ளியது. பாஜக 38 சதவீத வாக்குகள் பெற்றது.காங்கிரஸ் வாக்கு சதவீதம் 4 சதவீதமாக குறைந்து, மூன்றாம் இடத்துக்கு அடித்து செல்லப்பட்டது.
இதனால் ஆம் ஆத்மி மீதுடெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் கோபம். 3 ஆண்டுகளாக ஆம் ஆத்மியை திட்டி தீர்த்து வருகிறது ,காங்கிரஸ்.ஆம் ஆத்மியும் , பாஜகவை விட காங்கிரசையே அதிகமாக விமர்சனம் செய்கிறது.
இந்நிலையில், டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதா மாநிலங்களவையில் கொண்டு வரப்படும் போது அதனை எதிர்க்கும் படி , காங்கிரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லி காங்கிரஸ் தலைவர்களோ, ஒருபோதும் மசோதாவை எதிர்க்கக்கூடாது என கட்சி தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆம் ஆத்மிக்கு சாதகமாக செயல் படக்கூடாது என்பதில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.
டெல்லி தலைவர்கள் எதிர்ப்பால் இந்த விவகாரத்தில் முடிவு ஏதும் எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் தவித்தது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு , நோ என்றோ எஸ் என்றோ பதில் சொல்லாததால், அவர் எரிச்சலில் இருந்தார். எனினும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மாற்று அணியை கட்டமைப்பதில் அரவிந்த் ஆதரவு தேவைப்பட்டதால் காங்கிரஸ் மவுனம் கலைத்தது.
மாநிலங்களவையில் , மத்திய அரசின் மசோதாவை எதிர்ப்பதாக உறுதி அளித்தது,காங்கிரஸ் கட்சி.இதன் பின்னரே பெங்களூருவில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்றது.
ஆம் ஆத்மி அரசு, பலன் அடையும் வகையிலான மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்க ஒப்புக்கொண்டது, டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கட்சி மேலிடம் மீது அவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் தலைமை தங்களை அலட்சியம் செய்து விட்டதாக கருதுகிறார்கள்.
ஆம் ஆத்மிக்கு ஆதரவாக கட்சி மேலிடம் எடுத்துள்ள முடிவால் டெல்லி காங்கிரஸ் போர்க்கோலம் பூண்டுள்ளது. மூத்த தலைவர்கள்,காங்கிரசில் இருந்து வெளியேற உள்ளதாக டெல்லியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தான் ஒன்று வந்தால் ஒன்று போகும் என்று சொல்வார்கள்.
000