தமிழில் ஷங்கர் போல், தெலுங்கில் பிரமாண்ட சினிமாக்களை கொடுக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றன. இந்தியாவை தாண்டி ராஜமவுலியை அந்த படங்கள் அடையாளம் காட்டின.
இதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய மற்றொரு பிரமாண்ட படைப்பு ஆர்.ஆர்.ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்,அஜய்தேவ்கன்,அலியாபட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் உலக அளவில் பேசப்பட்டது.1300 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்தது.
ஆர்ஆர்ஆர். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றது.
ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி இருந்தார். இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் கதையையும் எழுதி முடித்துள்ள அவர் , இதனை ராஜமவுலி இயக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி இது: ஆர்.ஆர்.ஆர். படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறோம். இந்த படத்திலும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பார்கள். இது, ஹாலிவுட் தரத்தில் இருக்கும்.
படத்தை முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை ராஜமவுலி இயக்க வாய்ப்பில்லை. அவரது மேற்பார்வையில் மற்றொரு டைரக்டர் இயக்குவார்.
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் ராஜமவுலி இப்போது பிசியாக உள்ளார்.இந்த படத்தின் ஷுட்டிங் டிசம்பரில் ஆரம்பமாகிறது’’.
ஆர்.ஆர்.ஆர்.இரண்டாம் பாகத்தை ராஜமவுலிக்கு பதிலாக யார் இயக்குவார்கள்?என இந்திய சினிமா உலகமே எதிர்பார்ப்பில் உள்ளது.
000