டிசம்பர்-30,
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திடீரென சென்ற நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய் அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் முறையிட்ட விஜய்,விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு சட்டம் – ஒழுங்கு தொடர்பாக மனு ஒன்றை அளித்து உள்ளார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்று உள்ளது.
இது பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு…
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் கவர்னர் ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினோம்.
இவ்வாறு ஆனந்த் தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக நடிகல் விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு ..
“அன்பு தங்கைகளே
“உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்”
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகளை கண்டு மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
பெண்களுக்கான பாதுகாப்பை யாரிடம் கேட்பது? ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை.
எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும், அரணாகவும் உங்களுடன் உறுதியுடன் நிற்பேன்.
எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம்; அதற்கான உத்தரவாதத்தை சாத்தியப்படுத்துவோம்”
இவ்வாறு விஜய் அறிக்கையில் குறிபிட்டு உள்ளார்.
தவெக என்ற கட்சியை கடந்த அக்டோபரில் தொடங்கிய விஜய் முதன் முதலாக ஆளுநரை சந்தித்து முறையிட்டு உள்ளார்.
*