ஆளுநர் டெல்லி போனா….. எல்லாம் முடிஞ்சது… புது குண்டை தூக்கி போட்ட ஜெயக்குமார்!

June 21, 23

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெயக்குமார், ஆளுநர் டெல்லி சென்றால் திமுக ஆட்சி டிஸ்மிஸ் ஆகிவிடும் என்றார். ஊழலுக்காக மீண்டும் கலைக்கப்படும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும் எனக்கூறிய அவர், திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை வீதியில் இறங்கி போராடி வருவதாக கூறினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை கிராஸ் ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய செல்லூர் ராஜூ, கருணாநிதி காலம் தொட்டு திமுக பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளதாகவும், 3 ஆயிரத்து 600 பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அவர் குறிப்பிட்டார்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் முதலமைச்சர் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என சாடினார். தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, திமுக ஆட்சியில் சொத்து வரி, மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார். அமலாக்கத்துறையின் நெருக்கடிக்கு பயந்து செந்தில் பாலாஜி மருத்துவமனையில் படுத்து கொண்டுள்ளார் எனக்கூறிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து போராட்டக் களத்தில் 15 அடி உயரமுள்ள மதுபாட்டில் வைக்கப்பட்டது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *