ஜனவரி -06.
ஆளுநருக்கான அரசியல் சட்டக் கடைமைகளை செய்ய மனமில்லாத ஆர்.என்.ரவி அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்/
சட்டசபைக்கு வந்திருந்த ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்காமல் ஒரு சில நிமிடங்களில் வெளியேறியதும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சட்டப் பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தேசீய கீதம் பாட வி்ல்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலளித்து அவை முன்னவரான துரைமுருகன் சட்டப் பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் முந்தைய ஆண்டுகளில் ஆளுநர் வெளியேறிய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். தேசிய கீதம் குறித்த சர்ச்சை குறித்தும் விளக்கமளித்தார்.
“இது தொடர்பாக ஆளுநர் கடந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பேரவைத் தலைவர் பதிலளித்தார். இந்த அவையில் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவதை அதில் சுட்டிக்காட்டினார். ஆனால், மீண்டும் இதனை ஒரு பிரச்னையாக ஆளுநர் குறிப்பிட்டு, உரையை படிக்காமல் சென்றது அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது. இந்த நாட்டின் மீதும் தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும் இந்தப் பேரவையும் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் என்றும் மாறாத நன்மதிப்பைக் கொண்டது இந்த அரசு” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, விதி எண் 17- ஐத் தளர்த்தி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் “ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
இதற்கிடையே சட்டப் பேரவைக்கு வெளியே ஆளுநர் ரவியை விமர்சனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
“தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா.
தமிழ்நாட்டு மக்களையும், அரசையும், சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
“கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது!
அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
சட்டப் பேரவைக்கு வெளியே பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை உரை நிகழ்த்த விடாமல் தடுத்தது திமுக அரசுதான் என்று குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை உட்பட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் ஆளுநரின் செயலைக் கண்டித்து உள்ளார்கள்.
*