“ஆளுநர் மாளிகை செலவுசெய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியில் விதிமீறல் நடக்கிறது.” – பி.டி.ஆர்.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இருக்கும் மோதல் போக்கு அனைவரும் அறிந்த ஒன்றே. அதே நேரம் ஆளுநர் மாளிகை செலவுக் கணக்கு விவகாரம், கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட தேநீர் விருந்தை தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது முதல் பெரும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. அப்போதைய சூழலில் `வரவில்லையென்றால் டீ செலவு மிச்சம்’ என்றெல்லாம் ஆளும் கூட்டணிமீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநர் மாளிகை செலவுசெய்த ரூ.11.32 கோடிக்கான விவரங்கள் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதியில் விதிமீறல் நடக்கிறது” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில், பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுடனான சிறப்பு நேர்காணல் ஒன்றில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை ஆளுநர் ரவி மறுத்துப் பேசியிருக்கிறார். இந்த நேர்காணலில், `நிதி குறியீடு (finance code) மீறல்கள், ஆளுநரின் விருப்ப நிதியை (governor’s discretionary funds) தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன’ என்று ஆளுநர் ரவியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, “அவர்கள் கண்ணியமானவர்களாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள் என எதிர்பார்த்தேன். இங்கே நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய். முதலில் நிதி குறியீட்டின்படி, ஆளுநரின் விருப்பமான நிதியானது சிறு தொண்டு நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கும் சில ஆயிரம் ரூபாய் என்று நிதியமைச்சர் பொய் சொல்லியிருக்கிறார். காரணம் 2000-ம் ஆண்டிலேயே நிதி குறியீட்டிலிருந்து சிறு (Petty) வார்த்தை நீக்கப்பட்டுவிட்டது. மேலும், கிடைக்கப்பெறும் பட்ஜெட்டுக்குள் ஒரு வரம்பு இருக்க முடியாது, அவ்வாறு இருக்கவும் கூடாது. அதாவது ஆளுநரின் விருப்புரிமை நிதி வரையறுக்கப்படக் கூடாது.
அடுத்ததாக `அக்ஷய பாத்ரா’வை (Akshaya Patra) அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் 2000-ம் ஆண்டில் அப்போதைய ஆளுநர், பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் என்பதற்காக நாள் ஒன்றுக்கு ஆரோக்கியமான இலவச உணவை வழங்க விரும்பியதாகத் தெரிவித்திருக்கிறார். அக்ஷய பாத்ரா மிகவும் பிரபலமான என்.ஜி.ஓ. அவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு மில்லியன் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குகிறார்கள். பெருநகர சென்னை மாநகரப் பள்ளிகளுக்கு இலவச உணவை வழங்க அக்ஷய பாத்ரா முன்வந்தது.
அதற்கு அவர்கள் விரும்பியதெல்லாம் சுகாதாரமான சமையலறை மட்டுமே. அந்தச் சமையலறையின் மதிப்பீடு ரூ.5 கோடி. இந்தத் தொகையை ஆளுநர் தன் விருப்ப நிதியிலிருந்து தவணை முறையில் விடுவித்து, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழுவையும் அமைத்தார். டிசம்பர் 2021-ல், சமையலறைப் பணிகள் முடிந்தது. குடிநீர், எரிவாயு இணைப்புக்காக மாநகராட்சிக்குச் சென்றபோது, மாநகராட்சி அதைக் கொடுக்கவில்லை. கடந்த 16 மாதங்களாக அக்ஷய பாத்ரா, முதல்வர் அலுவலகம் வரை சென்று வருகிறது. அவர்களால் முதல்வரின் அப்பாயின்மென்ட் பெற முடியவில்லை.
மேலும், ஆளுநர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தேநீர் விருந்து நடத்துகிறார் என்று கூறுவது இன்னொரு புதிராக இருக்கிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று ராஜ்பவனில் பாரம்பர்யமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. முன்பெல்லாம் இதில் நிறைய அதிகாரிகள் மட்டும் இருந்தனர். அதை மாற்றி, அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்து விவசாயிகள், இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பாரம்பர்யக் கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சேர்த்தோம். சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதை ஆளுநரின் தேநீர் விருந்து என்று கூறுவது தமிழ்நாட்டு மக்களையும், தேசிய தின கொண்டாட்டத்தையும் அவமதிப்பதாகும்.
அதோடு ஆளுநர் ஊட்டியில் தேநீர் விருந்து நடத்தி சில லட்ச ரூபாய் செலவு செய்தார் என்று கூறுகிறார். இந்த தேநீர் விருந்து என்னவென்று அவருக்குத் தெரியுமா… இந்தப் பழங்குடி மக்கள் அனைவரும் என் விருந்தினர்கள். மாலை முழுவதையும் அவர்களுடன் கழித்தோம். எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உணவுக் கட்டணத்தை நானே செலுத்துகிறேன். ஆளுநரின் சலுகைகளின் கீழ் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும் நான் உணவுக் கட்டணத்தை தவறாமல் செலுத்துகிறேன். அவர்களால் என்னைப் பார்த்து விரலை உயர்த்த முடியாது.
இன்னொருபக்கம் சிவில் சர்வீஸ் தேர்வாளர்களுக்குப் பணம் செலவழிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது, தமிழ்நாடுதான் அதிக எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளைக் கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு நாம் பல மாநிலங்களுக்கு கீழே இருக்கிறோம். இதன் காரணமாக, 250 முதல் 300 ஏழை மாணவர்களைப் படிக்கவைக்க ஆரம்பித்தேன். அவர்களுக்கு நான் வழிகாட்டுகிறேன். அதோடு அவர்களை என்னால் பசியுடன் திருப்பியனுப்ப முடியாது. ஆனால், இதில் அரசாங்கம் காழ்ப்புணர்ச்சி கொள்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.