தமிழ்நாடு ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 15 பக்க கடிதத்தை எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு..
ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு தமிழ்நாடும் அரசும் சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
இதற்கு முன்பு நாகாலாந்து மாநில ஆளுநராக ரவி பொறுப்பு வகித்த போதும் அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்த இல்லை. அவர் அந்த மாநில ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகுதான் நாகாலாந்துக்கு நிம்மதி ஏற்பட்டு உள்ளதாக என்.டி.பி.பி. கட்சித் தலைவர் கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளதே இதற்கு உதாரணம்.
தமிழ் நாடு சட்டமன்றம் அனுப்பிய சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது.
ஊழல் புரிந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்து உள்ளார்.
ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில் அவருடைய அரசியல் மற்றும் மதக் கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து வருவது அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு பொருத்தமற்றது. அவர் இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைளில் நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். இதுவும் அந்த பதவிக்கு பொருத்த மற்றது.
தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய அவர் இந்த மாநிலத்தில் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வென்றதில்லை. அவர் மக்களின் தலைவர் இல்லை.நியமனம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகி. அவ்வளவுதான்.
திராவிட அரசியல் பிற்போக்குத் தனமானது என்று ரவி கூறியிருப்பது அவதூறானது, அறியாமையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆளுநர் ரவி தமிழர்கள் நலனுக்கு எதிரானவர். தமிழ் மக்களின் பண்பாடு மீது ஆழமாக வேரூன்றிய பகமை கொண்டவர். அவருடை பேச்சுகள் ஐனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பதாக இருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இருவர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கிடைத் தகவலின் பேரில் விசாரணை நடத்தி 8 ஆண்கள், 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் ரவி, ஒரு பேட்டியில் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இது குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகவும் சாட்சிகளை கலைக்கக் கூடிய வகையில் உள்ளதாலும் நிச்சயம் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய ஒன்றாகும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அனைவரும் அறிந்ததுதான்.
இந்த உண்மைகள் அனைத்தையும் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத் தக்கதாகவோ பொருத்த மானதாகவோ உள்ளதா என்பதை தங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கு ஆளுநர் ரவி என்ன பதில் சொல்லப்போகிறார் என்பது தெரிந்தால் நல்லது.
000