ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு – ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நீட்டிப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கான ஜாமீனை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் தமது பதவிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கியிருந்தது.

இந்நிலையில், இந்த ஜாமீனை மேலும் நீட்டிக்கவும், ஜாமீனுக்கான நிபந்தனைகளைத் தளர்த்தவும் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க டி.ஜி.பி. பரிந்துரைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் என்பதால் கவர்னரிடம் ஒப்புதல் பெற 6 மாதம் ஆகும். எனவே இதற்கு அவகாசம் வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, ‘ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் வகையில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு வழங்கிய ஜாமீனை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ராஜேந்திரபாலாஜி, தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும்பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரலாம் என்றும் அறிவுறுத்தினர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *