June 04, 23
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கு முன்பு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்….
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்:
1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1999-ம் ஆண்டு அசாமில் நிகழ்ந்த கெய்சல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று தற்போது பீகார் முதலமைச்சராக உள்ள நிதிஷ்குமார் தனது மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்….
2000-ஆவது ஆண்டில் நேர்ந்த இரண்டு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, அப்போதைய ரயில்வே அமைச்சரான மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை பிரதமர் வாஜ்பாய் நிராகரித்தார்..
2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் கைஃபியத் விரைவு ரயில் மற்றும் பூரி-உத்கல் விரைவு ரயில் ஆகியவை நான்கு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து தடம் புரண்ட நிலையில் அப்போதைய ரயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.