இந்தியன் அனுபவித்த இம்சைகள்.. இயக்குநர் ஷங்கருககு ஏற்பட்ட இன்னல்கள்.

வடிவேலுவை நாயகனாக வைத்து இம்சை அரசன் 21 ஆம் புலிகேசி படத்தை தயாரித்தவர் இயக்குநர் ஷங்கர். இதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்த ஷங்கர், வடிவேலுவின் இம்சையால் படத்தை பாதியிலேயே கைவிட நேர்ந்தது.

இப்போது நான் சொல்லப்போகும் விஷயம், இம்சை அரசன் குறித்து அல்ல. இந்தியன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து, ஷங்கர் அனுபவித்த இம்சைகளை.

1996 -ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை , இந்தியன் -2 எனும் பெயரில் உருவாக்கப் போவதாக 2017-ஆம் ஆண்டு அறிவித்தார் ஷங்கர். ஹீரோ, முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான்.

ஆரம்பத்தில் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு, தயாரிப்பதாக இருந்தது. ( இவர், விஜயின் வாரிசு படத்தை தயாரித்தவர்) அவர், பட்ஜெட்டை கேட்டு மிரண்டு ஐதராபாத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார்.

அதன் பிறகே லைகா நிறுவனம் , இந்தியன் 2- ஐ தயாரிக்க முன் வந்தது. வயதான கேரக்டருக்கான மேக்கப் திருப்தியாக இல்லை என கமல் அதிருப்தி அடைந்தார். அதனை சரி செய்து 2019- ல் படத்தை தொடங்கினார், ஷங்கர். கொரோனோ தாக்கத்தால் படம் இரண்டு ஆண்டுகள் முடங்கியது.

மீண்டும் படத்தை ஆரம்பிக்க ஷங்கர் முயன்றபோது பட்ஜெட் தொடர்பாக, லைகாவுக்கும் ஷங்கருக்கும் இடையே லடாய். இந்தியனை கிடப்பில் போட்டு விட்டு ராம் சரணை நாயகனாக வைத்து “கேம் சேஞ்சர்” படத்தை தெலுங்கில் ஆரம்பித்தார், ஷங்கர்.

இந்தியனை முடிக்காமல் தெலுங்கு படத்தை இயக்கக்கூடாது என நீதிமன்றத்துக்குப் போனது லைகா. கொஞ்ச காலத்துக்கு பிறகு சமரசம் ஏற்பட்டு ஆந்திராவிலும் வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடந்தது. போரூர் ஈவிபி ஸ்டூடியோவில் ஷுட்டிங் நடந்தபோது, கிரேன் விபத்தில் 3 பேர் இறந்து போனதால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது

லைகாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால், இந்த படத்தின் இன்னொரு தயாரிப்பாளராக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து கொண்டது.

இந்த மாதத்தில் (ஜுன் ) படத்தை முடித்துவிட தீர்மானித்தார் ஷங்கர். இறுதிக்கட்ட காட்சிகளை அண்மையில் சென்னை விமான நிலையத்தில் படம் பிடித்தார். விமான புறப்பாடு பகுதியில் ஷுட்டிங் நடத்த, ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்தி ஷுட்டிங் நடத்தப்பட்டது. ஆனால் கழிப்பறை அருகே படப்பிடிப்பு நடத்தியதால், ஷுட்டிங்கை அதிகாரிகள் திடீரென நிறுத்தினர். பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் ஷுட்டிங் நடந்துள்ளது.முழுவதுமாக படப்பிடிப்பு முடிந்து விட்டது.டப்பிங் வேலைகள் ஜரூராக நடக்கிறது.

2024- ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்தியன் -2 காட்சி தருவார்  என தெரிகிறது.

படம் அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகி, படப்பிடிப்பு ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இதில் நடித்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோர் இறந்து விட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.

  • சினி மேன்

——-

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *