‘இந்தியா’ அணியில் ஏழரை ஆரம்பம்…! மம்தாவுடன் மோதும் மார்க்சிஸ்ட்…!

பாஜகவுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் திரினாமூல் காங்கிரஸ் தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரியும் கலந்து கொன்டனர்.

நாடு முழுவதிலும் மக்களவைதேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளரை மட்டும் போட்டியிடச்செய்வது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் டெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் திரினாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.இதன்மூலம், இந்தியா கூட்டணியின் முதல் விரிசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சுமார் 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி செய்து வந்தனர். இடதுசாரிகளை 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தா தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது.

தனித்து போட்டியிடுவது குறித்து மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்த கருத்து இது:

“நாங்கள் திரினாமூல் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டால், மம்தாவுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்யலாம் என பாஜக கருதுகிறது. இதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்’ என்று விளக்கம் அளித்தனர்.

’தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் மே.வங்க கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை பேசித்தீர்த்து கொள்வோம்’’ என இந்தியா அணி தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *