ஆகஸ்டு,31-
பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி சாத்தியமாகியுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டத்தை அவரே,ஏற்பாடு செய்து பாட்னாவில் நடத்தினார்.
இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்திருந்தது.அனைத்து தலைவர்களுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்தளித்தார்.எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா’ என இந்த கூட்டத்தில் பெயர் சூட்டப்பட்டது.
முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக மூன்றாவது ஆலோசனை கூட்டம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் நடக்கிறது. 26 கட்சிகளை சேர்ந்த 60 தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.கூட்டத்தில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை முதலே தலைவர்கள் மும்பை வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கூட்டத்தில் ’இந்தியா’கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவரோ, ‘ஒருங்கிணைப்பாளர் பதவி எனக்கு வேண்டாம்’ என மறுத்துவிட்டார். இந்த கூட்டணியின் ‘பெரிய அண்ணானாக’ காங்கிரஸ் கட்சிஉள்ளது. எனவே ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட உள்ளார்.இவர் தலித் என்பதால் மக்களவை தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகளை ஒட்டு மொத்தமாக அறுவடை செய்யலாம் என ’இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள் நம்புகிறார்கள்.
பிராந்திய கட்சிகளில் இருந்து இரண்டு பேர் துணை ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது தவிர, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு வசதியாக 11 பேர் கொண்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த குழுவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்தது போல், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தின் முக்கியத்துவத்தை குறைக்க மத்திய அரசு , மேலும் சில சலுகைகளை அறிவிக்கும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
000